
தந்தையர் தினம்: தாயும் ஆனவன்!
தாயாகித் தந்தையுமாய் தாங்குபவன் என்றும், தாயுமானவன் என்றும், இப்படி எல்லா இடத்திலும் தாயை முன்வைத்துத் தகப்பனைச் சொன்னாலும் - தாயன்புக்குச் சற்றும் குறைந்ததல்ல, தந்தையின் அன்பு, பாசம், பிரியம். ஒரு தகப்பனின் பாசத்தை விளக்கும் வண்ணம் அன்று "காவல்காரன்' படத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து எம்ஜிஆர் பாடுவார்,
""குழந்தை பாரம் உனக்கல்லவோ...
குடும்ப பாரம் எனக்கல்லவோ...
கொடியிடையின் பாரம் எல்லாம்
பத்து மாதக் கணக்கல்லவோ...
மனைவியையும் குழந்தையையும்
ஒருவனாகச் சுமக்கின்றேன்...
என்று. உண்மை தானே. ஒரு குழந்தையைச் சமுதாயப் பிரக்ஞை உள்ள நல்ல மனிதனாக வளர்க்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் தந்தைக்குத்தான்.
சில அப்பாக்கள் தங்களது மகிழ்ச்சியையும், பெருமைகளையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் குடத்துள் விளக்காய் இருப்பார்கள். தூங்கும்போது பக்கத்தில் வந்தமர்ந்து, தன் குழந்தையின் தலையைக் கோதி, பாதத்தை முத்தமிட்டு பாசத்துடன் அப்பாக்கள் கொஞ்சுவது இந்த விஷமக்காரக் குழந்தைகளுக்குத் தெரியாதா என்ன..? கண்களை இறுக மூடிக் கொண்டு தூங்குவதுபோல் நடிக்கும் குழந்தைகள் எத்தனை பேர்..?
ஒரு குழந்தையின் முன்னேற்றத்தில் அப்பாக்கள் பெருமையுறுவது, பூரிப்பது எப்போது தெரியுமா? -"இவன் தந்தை என்னோற்றான்கொல்' என்கிறபோதுதான். துடிப்பும், துள்ளலுமாய் வளர்ந்த பெண் குழந்தைகள் இங்கே அவர்களது செல்ல அப்பா பற்றி மனம் திறக்கிறார்கள்:
பரதக் கலைஞர் அனிதா ரத்னம்: நாட்டியத்தை என் 26-வது வயதில் ஒரு திருப்பு முனையாகக் கொண்டு, முழு நேரப் பணியாக நான் மேற்கொள்ளச் செய்தவர் என் அப்பாதான். சந்திரனுக்கு முதன்முதலாக மூணு பேர் பூமியிலிருந்து ஒரே சமயத்தில் போய்ச் சேர்ந்தாலும், முதல் அடியை எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்தான் எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கும். முந்தானையைப் பிடிச்சுட்டு நிக்கக் கூடாது. பத்திரிகையோ, டிவியோ, டான்úஸô - எதை நீ தொழிலாக எடுத்துக் கொண்டாலும், அதில் முதல் பாதம் பதிக்கணும். இப்படி எனக்கு மட்டுமல்ல, நிறையப் பேருக்கு ஊக்கம் கொடுத்தார்.
நான் அமெரிக்காவை விட்டு வந்தபோது, அம்மாவைவிட அப்பாதான் என்னை ஆதரித்தார். "இந்தா, தீபாவளிக்குப் பதிலா உன்னோட நடன நிகழ்ச்சிக்கு உபயோகப்படுத்திக் கொள்' என்று 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து அசத்துவார். அவருக்கு அது ஒரு பெரிய பணம் இல்லையென்றாலும், அது என்னைத் தலை நிமிர்ந்து நடக்கப் பண்ணும். "உன் ஆபீûஸ வீட்டில் வைத்துக் கொள்ளாதே. அது புரபஷனலாக இருக்காது' என்று சொல்லி, தனது டி.வி.எஸ். அறைக்குப் பக்கத்து அறையை எனக்காக ஒதுக்கிக் கொடுத்தார். "அரங்கம்' என்கிற அமைப்பு ஒன்றைத் துவக்கி "புருஷ்' என்கிற நாட்டிய நிகழ்ச்சியை மியூசிக் அகாதமியில் நடத்தினேன். முதல் வரிசையில் நடிகர் திலகத்துடனும் நாகேஷுடனும் அமர்ந்து ரசித்தார். அவர் காலமாவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு பார்ட்டியில்தான் - "மீட் அனிதா ரத்னம்ஸ் ஃபாதர்' என்று அறிமுகப்படுத்தப்பட்டதைச் சொல்லிப் பெருமிதம் கொண்டது இப்பவும் ஞாபகம் இருக்கு. அவரது பெயர், என் பெயரோடு எப்பவும் இணைத்து இருக்கும் என்பதே பெரிய ஆறுதல் எனக்கு.
"சவேரா' நீனா ரெட்டி: நீ வீட்டில் நான்தான் முதல் குழந்தை. அதனால் சிறு வயதிலேயே நிறையப் பொறுப்புகள் எனக்கு. அம்மாகிட்டே நான் அடிகூட வாங்கியிருக்கிறேன் - ஏன், எதற்கு என்பது தெரியாமலேயே. என்னை வைத்துத்தான் பல விஷயங்களைப் பரிட்சித்துப் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வாரக் கடைசி நாட்களிலும் தாத்தா, பாட்டி வீட்டுக்கு பாய்ந்துவிடுவேன். அங்கேதான் நான் நானாக இருக்க முடிந்தது. அதே போன்றதொரு சுதந்திரச் சுகம் இன்றைக்கு என் குழந்தைகளுக்கு என் மூலம் கிடைத்திருக்கிறது. எனது ஒவ்வொரு சாதனையையும் முன்னேற்றத்தையும் பாராட்டையும் என் அப்பா பார்த்துப் பார்த்துச் சந்தோஷப்படுவதே எனக்குக் கிடைத்த பரிசாகக் கொள்கிறேன்.
"பெண்டாமீடியா' அனிதா: அப்பா சந்திரசேகர் எப்பவுமே பிஸி என்பதால், அதிக நேரம் அம்மாவோடுதான் பொழுது கழியும். பெற்றோர்க்கு நான் ஒரே குழந்தை என்பதால், அப்பா என்னைத் திட்டி ஒரு வார்த்தைகூடச் சொன்னதில்லை. அவரைப் பார்ப்பது, பேசுவது என்பதே அபூர்வம் என்பதால் கிடைக்கிற பத்து நிமிடம்கூட ரொம்பப் பொக்கிஷம்னுதான் சொல்லுவேன். அந்தச் சமயத்தில் அவர் என்ன சொல்லப் போறார், புதுசா நாம என்ன அவர்கிட்டக் கத்துக்கலாம்னுதான் தோன்றும்.
"உனக்கு என்ன ஆசையோ, எதில் ஆர்வமோ அதைப் பண்ணு' என்பார். "கார் ஓட்டக் கத்துக்கோ, படம் தயார் பண்ணு, டைரக்ட் பண்றியா பண்ணு, யாரையும் சார்ந்திராமல் எதிலும் உன் காலில் நிற்க கற்றுக் கொள்' என்று எப்போதும் நமது சிந்தனையை ஆக்டிவாக வைத்திருக்கச் செய்வார். அவரது எண்ணங்கள், மன ஒட்டம், தகவல்கள் எல்லாமே புதுசு புதுசா இருக்கும். "நோ' என்கிற வார்த்தையை அவரிடமிருந்து நான் கேட்டதே இல்லை. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி - பெண்களை அவர் பெரிதும் மதிக்கிற குணம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
"வயலின்' விஜி கிருஷ்ணன் நடராஜன்: ரொம்பவுமே கண்டிப்பான அப்பா. மனதில் எதையும் வைத்துக் கொள்ளத் தெரியாத வெள்ளை மனிதர். எவ்வளவுக்கு எவ்வளவு கட்டுப்பெட்டியா எங்களை வளர்த்தாரோ அதற்குச் சமமா சுதந்திரமும் கொடுப்பார். சிறு வயதில் மட்டுமல்ல, இப்பவும் அவர் வயலினைக் கையில் எடுத்துவிட்டால் குரு. என்னிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அது இயற்கைதானே. வயலினைக் கீழே வெச்சுட்டா மறுநிமிஷமே அன்பான அப்பா. சாதகம் பண்ணிக் கொண்டிருக்கும்போது அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டே வாசிப்பேன். ஆனால் அயர்ந்த தூக்கத்திலும்கூட என் வாசிப்புக்கேற்ப அவர் பாதங்கள் அசைந்து கொடுப்பதைப் பல முறை கண்டு வியந்திருக்கிறேன். ஜாதி, இன, மத பேதமில்லாமல் எல்லாரையும் ஒரே லெவலில் வைத்துப் பார்ப்பார்; பழகுவார்; மனம்விட்டுப் பாராட்டுவார். சங்கீதம் தவிர அப்பாவிடமிருந்து நான் பெரிதும் பின்பற்ற விரும்புவது அவரது அந்த மனித நேயத்தைத்தான்.
"ஸ்ரீகோகுலம்' லிஜிஷா பிரவீண்: குழந்தையா இருந்ததிலிருந்து இப்போ எனக்கு குழந்தை பிறந்த பிறகும்கூட, அப்பாவோடு நான் எங்கே போனாலும் "கோகுலம் கோபாலன் பொண்ணா?' என்று எனக்குக் கிடைக்கும் முதல் மரியாதையில் இருந்தே அப்பாவின் உழைப்பு எப்பேர்ப்பட்டது என்பது எனக்குப் புரியும். குடும்பத்துக்கும் மேலாக தனி ஒரு மனிதனாக இருந்து இந்தியா முழுக்க 125 கிளைகளை உருவாக்கியவர். "படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. மனிதர்களைப் படிக்கணும், நிறையப் பிரயாணம் பண்ணணும், விளையாட்டு, பாட்டு, டான்ஸ் பார்க்கணும்' என்பார். ஆனால், அவர் உட்கார்ந்து ஒரு மியூசிக் கேட்க, அனுபவிக்க நேரம் கிடைக்காது. அதில் பாடறது யார்னுகூடச் சொல்லத் தெரியாது. பிறகு எங்கே ரசிக்க? எப்போவாவது தூறல் போட்ட மாதிரி திடீர்னு வருவார். அவருக்கு விதவிதமான பேனாக்கள் பிடிக்கும். இந்த "அப்பாக்கள் தின'த்துக்கு அதைக்கூட எதிர்பார்க்க மாட்டார். ஊரில் அவர் இருந்தால் அவருக்கு என்னோட ஒரு முத்தம் போதும்!
நன்றி;நிலா முற்றம்
Labels: தந்தை, தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்










